ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் – ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என மன்றத்தின் நிர்வாகி வி.எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் உடல் நிலையினால் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்திருந்தார்.
அதே நேரத்தில் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ‘வா தலைவா வா’ என்ற கோஷத்துடன் சென்னையில் அண்மையில் தர்ணாவிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
“ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் விடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்