தமிழ்நாடு

அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது!

அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது.

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக இந்தியாவில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் இன்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 17-ந் தேதி வரை கொண்டாடவிருக்கிறது. சாலை பாதுகாப்பு குறித்த திரைப்படம் வெளியிடப்படுவதுடன், வாகா எல்லை முதல் கன்னியாகுமரி வரையிலான தேசிய சாம்பியன்ஷிப் பாதுகாப்பு விரைவு சவால் என்ற பயணமும் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட உள்ளது.

மேலும் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவை கலந்து கொள்ளும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சாலை விபத்தை குறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி விருதினை வழங்கினார். இந்த விருதை தமிழ்நாடு போக்குவரத்து கூடுதல் ஆணையர் மணக்குமார் பெற்றுக்கொண்டார்.

போக்குவரத்து கூடுதல் ஆணையர் மணக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக 54 சதவீதம் அளவிற்கு சாலை விபத்துகள் குறைக்கப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் 100 சதவீதம் சாலை விபத்துகள் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 2030-க்குள் இந்த இலக்கு எட்டப்படும்’ என தெரிவித்தார்.