தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் பள்ளி திரும்பியுள்ளனர்.

12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறைகள் துப்புரவு செய்யப்பட்டு, பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவ – மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனை, சானிட்டைசர் கொண்டு கைகழுவிய பிறகு, முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி அனுமதிக்கப்பட்டனர். சுமார் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர்.

பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு படிவத்துடன் வரும் மாணவ – மாணவிகளை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பில் அனுமதிக்க வேண்டும், மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக கற்றல் சூழ்நிலைகளுக்கு தயார்படுத்திய பிறகே பாடங்களை தொடங்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மே இறுதியில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கேற்ப பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்பதால் வருகைப் பதிவும் எடுக்கப்படவில்லை. வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க சத்துமாத்திரைகள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.