உலகம்

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்பு

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி வாஷிங்டன் மற்றும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், டொனால்ட் டிரம்பை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்நிலையில் உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் ஜோ பைடன் புதிய அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். பைடனுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சும், கமலாவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயரும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கின்றனர். இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக பைடன் சொந்த ஊரான டெலவர் மாகாணம் நியூ கேஸ்டிலில் இருந்து புறப்பட்டு வாஷிங்டன் சென்றடைந்தார்.

அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இம்முறை குறைவான அழைப்பாளர்களே பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். வாஷிங்டனில் நாடாளுமன்ற வெளிவளாகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வழக்கமாக புதிய அதிபரின் பதவியேற்பில், முன்பிருந்த அதிபர் பங்கேற்பது வழக்கம். ஆனால், ஜோ பைடனை சந்திக்காமலேயே டிரம்ப் சொந்த மாகாணமான ஃபுளோரிடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை அதிபராகப் பதவி வகித்து வந்த மைக் பென்ஸ் பங்கேற்கிறார். முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பதவியேற்புக்குப் பின் ராணுவ மரியாதையுடன் அதிபரும், துணை அதிபரும் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

கடந்த 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதால் காவல்துறை அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பைடன் பதவியேற்கும் போதும், வன்முறை நடக்கலாம் என உளவுத்துறை தெரிவித்துள்ளதால் வாஷிங்டன் நகரமே ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 25 ஆயிரம் தேசிய பாதுகாப்புப் படையினரும், 4 ஆயிரம் காவல்துறையினரும் நாடாளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகமான கேபிடாலைச் சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரம் செய்பவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.