அரசியல்தமிழ்நாடு

திமுக ஆட்சிக்கு வந்தால் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது – முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்தால் வியாபாரிகள் நிம்மதியாக தொழில் செய்ய முடியாது என்று குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகை 2ஆயிரத்து 500 ரூபாயை ஏழை எளிய மக்களுக்கு வழங்கவிடாமல் தடுக்க மு.க.ஸ்டாலின் முயற்சித்ததாகவும் புகார் கூறியுள்ளார்.

கோவை டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் கோவிலில் வழிபட்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் ராஜவீதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழகம் மின்மிகை மாநிலமாகவும், அமைதிப் பூங்காவாகவும் திகழ்வதால், தொழில் வளம் பெருகுவதாகக் கூறிய முதலமைச்சர், திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நில அபகரிப்பு, கொலை, கொள்ளை போன்றவை ஏற்படும், மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாது என்று கூறினார்.

அதிமுகவிற்கு மடியில் கனமில்லை, அதனால் பயமில்லை என்றும், ஊழல் குற்றசாட்டு குறித்து தாம் நேரடியாக விவாதிக்க தயார் என்றும் கூறிய எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும் என விமர்சித்தார்.

வழக்கறிஞர்களை ஏவிவிட்டு, பொங்கல் பரிசுத் தொகை 2ஆயிரத்து 500 ரூபாயை ஏழை எளிய மக்களுக்கு வழங்கவிடாமல் தடுக்க மு.க.ஸ்டாலின் முயற்சித்ததாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.