இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மற்றொரு சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

.ஜம்மு: ஜம்மு – காஷ்மீரில், சர்வதேச எல்லை அருகே, 500 அடி நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டாவது சுரங்கப்பாதை இது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு அடிக்கடி முயற்சிக்கின்றனர். எல்லையில் நம் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு அதிகரித்து உள்ளதால், இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், ஹீராநகர் பகுதியில், சர்வதேச எல்லையை ஒட்டி, 500 அடி நீளத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளதை, பி.எஸ்.எப்., எனப்படும், இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர், நேற்று கண்டுபிடித்தனர்.

இந்த பாதை, பாகிஸ்தானில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து, 30 அடி ஆழத்தில், மூன்று அடி அகலத்துக்கு, இந்த சுரங்கப் பாதை அமைந்திருந்தது. இதே ஹீராநகர் பகுதியில், 13ம் தேதி, 500 அடி நீள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.கடந்த, 10 நாட்களுக்குள், இரண்டாவது சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஆறு சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய சுரங்கப் பாதை வழியாக, பயங்கரவாதிகள் ஊருடுவியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.இதற்கிடையே, பூஞ்ச் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் அமைத்திருந்த பதுங்கு குழிகளை, பி.எஸ்.எப்., வீரர்கள் கண்டுபிடித்தனர்; அவை அழிக்கப்பட்டன. அங்கிருந்து, ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது