இந்தியா

72வது குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லி ராஜபாதையில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

72வது குடியரசு தினமான இன்று டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்திய திருநாட்டின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, போர் நினைவுச்சின்னத்தில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதைக்கு வருகை தந்தார்.

அவரை தொடர்ந்து ராஜபாதைக்கு வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். இதனையடுத்து மூவர்ண கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தார். பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். வங்கதேச முப்படைகளில் இருந்து 122 வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

முன்னதாக குடியரசு தின விழாவில் கண்காணிப்பு பணியில் 6 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக டெல்லியை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜபாதையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கொரோனா கால நெறிமுறைகைள பின்பற்றி 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். குடியரசு தின விழா நிகழ்ச்சியை தொடர்ந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறுவதால், பல முனைகளிலும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படுகின்றனர்.