”ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம்”- ஆர்.பி.உதயகுமார்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72 குடியரசுத்தினத்தை முன்னிட்டு, அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இதனை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜோதி ஏற்றி தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் உலகத்தின் எட்டாவது அதிசயம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், முதல்வர் குறைதீர்ப்பு முகாமில் 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். முதலமைச்சரின் குறை தீர்க்கும் முகாம், மக்கள் தொடர்பு முகாம் உள்ளிட்ட முகாம்களில் திமுக கட்சியினர் கூட மனு அளித்து தீர்வு கண்டுள்ளனர் என்றார். 100 நாட்களில் அதிமுக அரசு வீட்டுக்கு சென்று விடும் என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள், தற்போது 100 நாட்களில் மக்களின் குறை தீர்க்கப்படும் என சொல்கிறார்கள், இது மக்களை ஏமாற்றும் செயல் என விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ’கொரோனா நோய்த்தொற்று காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிலேயே நடைபயணம் செய்து கொண்டிருந்தார். கண்ணாடியும், கையுறையும் அணிந்து கொண்டு நான்கு சுவற்றுக்குள் சுற்றி சுற்றி வந்தாரே தவிர மக்களை காப்பாற்றுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என குற்றஞ்சாட்டினார்.