உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!
டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டதால், பதற்றமான சூழல் நிலவியது. இதனால் டெல்லியில் சில இடங்களில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இதில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த உயர்மட்ட கூட்டத்தில், டெல்லியில் கூடுதலாக துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது.