4 ஆண்டு சிறைவாசம் முடிந்து இன்று விடுதலையாகிறார் சசிகலா!
மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிடம் காலை 9 மணியளவில் காவல் அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பம் பெறுகின்றனர். ஆவணங்களில் கையொப்பம் பெறும் நடைமுறைகள் முடிந்ததும் காலை 10.30 மணிக்கு சசிகலா முறைப்படி விடுவிக்கப்படுகிறார். விடுதலைக்குப் பிறகு சசிகலாவை உறவினர்கள் சந்தித்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதா அல்லது வேறு மருத்துவமனைக்கு மாறலாமா என்பது குறித்து ஆலோசிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இல்லை என கூறப்பட்டுள்ளது.
அவரது நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவை இயல்பான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு செயற்கையாக ஆக்சிஜன் கொடுக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை கூறியுள்ளது. அவர் உணவு உட்கொள்வதாகவும், எழுந்து அமர்வதாகவும், ஊன்றுகோலுடன் நடப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.