டெஸ்ட் கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ நடராஜன் ஒரு ஆயுதம் – இர்பான் பதான்
டெஸ்ட் கிரிக்கெட்டை பிரிஸ்பனில் நடராஜன் தொடங்கிய விதம் இந்திய கிரிக்கெட்டுக்கு டெஸ்ட்டில் அவர் பெரிய ஆயுதமாகத் திகழ்வார் என்று முன்னாள் இடது கை சுல்தான் ஆஃப் ஸ்விங் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு நெட் பவுலராகச் சென்று டி20, ஒருநாள், டெஸ்ட் என்று அனைத்திலும் இந்திய அணிக்காக ஆடி அசத்தல் பெர்பார்மன்ஸ் காட்டியுள்ளார் நடராஜன்.
நடராஜன் பற்றி இர்பான் பதான் கூறியதாவது : ஒரு அணிக்கு இடது கை வேகப்பந்து வீச்சாளர் எப்போதும் கூடுதல் பலம். மாற்று பந்து வீச்சாக இவர்கள் பேட்ஸ்மென்களுக்கு வித்தியாசமான கோணத்தில் வீசி சிரமம் கொடுப்பார்கள்.
நடராஜன் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஆயுதமாகத் திகழ்வார், அவர் தன் வேகம் ரிதம், கோணம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அவர் பந்து வீசும் போது பந்துக்கு பின்னால் தன் உடலை பேலன்ஸ் செய்ய வேண்டும், முன்னால் விழுமாறு, குனிந்து வீசக் கூடாது. பந்தை டெலிவரி செய்யும் போது உடலை பந்துக்கு பின்னால் வைத்துதான் வீச வேண்டும் அப்போதுதான் பந்தை உள்ளேயும் கொண்டு வர முடியும்.
நடராஜன் அடுத்த 5-7 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் ஆடுவதற்கான மாற்றங்களை தன் பந்து வீச்சில் செய்ய வேண்டியுள்ளது. முதலில் உடல் தகுதியில் கவனம் தேவை. அவர் இப்போதைக்கு தன்னிடம் உள்ள திறமையை திறம்பட பயன்படுத்தி போகப் போக புதியனவற்றைக் கற்றுக் கொண்டால் போதும்.அணி நிர்வாகவும் அவருடன் சேர்ந்து பணியாற்றி அவரை ஒரு சர்வதேசத் தர பவுலராக உருமாற்றுவார்கள் என்று நம்புகிறேன், என்றார்.