தமிழ்நாடு

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக ஜனவரி 5 ஆம் தேதி ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 10 நாட்களில் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் ஜனவரி 19 ஆம் தேதி லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அன்றைய தினமே அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை கொண்டு வரப்பட்டார். பின்னர், அங்கிருந்து 3 மணி நேரத்திற்குள்ளாக அமைந்தகரை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு , வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.தொடர்ந்து, Prone ventilation முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நுரையீரல் பாதிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர்.

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அமைச்சர் காமராஜுக்கு, கடந்த 25 ம் தேதி வெண்டிலேட்டர் அகற்றப்பட்டது. இந்நிலையில் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், ஜனவரி 30 ஆம் தேதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

தொற்று நீங்கிய நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியுள்ளார்.