திருமண விழாவில் லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட இந்தியா VS இங்கிலாந்து டெஸ்ட் போட்டி!
இந்தியாவில் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட்டை திருவிழாவாக கருதி ரசிகர்கள் கொண்டாடுவது உண்டு. அதற்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். சச்சின் இந்தியாவுக்காக விளையாடிய காலங்களில் ‘கிரிக்கெட் தான் எங்கள் மதம், சச்சின் தான் எங்கள் கடவுள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் தாங்கி நின்றது உண்டு.
அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் சென்னை – சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி லைவ் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.
அதை புகைப்படத்துடன் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார் பிசிசிஐயின் உறுப்பினரும், ஐபிஎல் தொடரின் மீடியா மற்றும் கம்யூன்சிகேஷன் குழுவில் உள்ள மவுலின் பரிக். “இனி திருமண விழாக்களில் கிரிக்கெட் போட்டிகள் லைவ் ஸ்ட்ரீமாவதை தவிர்க்க முடியாது. டிஜிட்டல் தொழில்நுட்ப வரவுக்கு முன்னர் வரை இந்திய அணி கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக திருமண விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளேன். இனி அந்த தேவை இருக்காது” என அந்த ட்வீட்டுக்கு கேப்ஷன் போட்டுள்ளார் அவர்.