இந்தியா

உத்தரகாண்ட் வெள்ளம் – துளிநேர உறக்கமின்றி தீவிர மீட்பு பணியில் மீட்பு படையினர்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஞாயிறு அன்று பனிப்பாறைகள் சரிந்து தாலி கங்கா, அலக்நந்தா ஆறுகளில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது.

பெருவெள்ளத்தில் பாறைகள், கற்கள் அடித்துவரப்பட்டது. இதில் தாலி கங்கா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தபோவான் மற்றும் ரிஷிகங்காவில் நீர் மின்நிலைய அணைகள் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றின் ஆக்கோஷத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணைகள் இடிபாடுகளாக கிடக்கின்றன.

இந்த கோரச் சம்பவத்தில் 32 பேர் உயிரிழப்பு வெள்ளத்தில் சிக்கிய 193 பேர காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. தபோவான் சுரங்கம் பகுதியில் மொத்த மீட்பு படைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நீர்மின் நிலைய அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற 2 சுரங்கங்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

அவற்றில் ஒரு சுரங்கத்தின் பணி சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு முடிந்துள்ளது. ஞாயிற்று கிழமை இந்த சுரங்கப்பகுதியில் தொழிலாளர்கள் பணியாற்றிய போதுதான் வெள்ளம் நேரிட்டது. குப்பை கூழங்களுடன் சேறும் சகதியுமாக வெள்ளம் சுரங்கத்திற்குள் புகுந்துவிட்டது

சில மணி துளிகளில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளிருந்தவர்கள் சுதாரித்துகொண்டு வெளியே ஓடிவர முடியவில்லை… அங்கேயே சிக்கிக்கொண்டனர். தற்போது சுரங்கத்திற்குள் சுமார் 37 பேர் வரையில் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே சுரங்கத்தில் இருந்து சிலர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்டுவிடலாம் என அதிதீவிரமாக மீட்பு பணி நடக்கிறது. அள்ள அள்ள வரும் சேறும் சகதிக்கும் மத்தியில் அவர்களுடைய போராட்டம் இரவும் பகலுமாக நடந்து வருகிறது

இந்தோ – திபெத்திய எல்லைப் படையினர், மத்திய, மாநில பேரிடர் படையை சேர்ந்தவர்கள் என சுமார் 1000 வீரர்கள் துளிநேர உறக்கமின்றி சேறுகளை அகற்றி வருகிறார்கள்…