விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 29-ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்!

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

சென்னையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா 339 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் இந்தியாவின் அஸ்வின் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இன்றையப் போட்டியில் இங்கிலாந்தின் டோம் சிப்லே, லாரண்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார். இதுவரை சர்வதே டெஸ்ட் போட்டிகளில் 29 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் அஸ்வின். இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 391 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மொத்த விக்கெட்டுகளில் 200 இடது கை பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு இன்னிங்ஸ் பாக்கி இருக்கும் நிலையில் இந்தத் தொடருக்குள்ளாகவே அஸ்வின் 400 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப்படைப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.