இந்தியா

நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு

வங்கி மோசடி செய்த விவகாரத்தில் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என தமது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அவருக்கு போதுமான மருத்துவ உதவிகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

அவருக்கு இந்தியாவில் மனநல சிகிச்சை வசதியும் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, தமக்கு எதிரான இந்த வழக்கில் இந்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தமது செல்வாக்கை பயன்படுத்துகிறார் என்ற நீரவ் மோடியின் குற்றச்சாட்டை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தப்பிச்சென்ற நீரவ் மோடி கடந்த 2019 ல் பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.