அரசியல்தமிழ்நாடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று (பிப்.,26) காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் (வயது 88) சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான மருந்துகளை உட்கொண்டுவந்த அவர், உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் இன்று காலமானார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932ல் பிறந்த தா.பாண்டியன், மாணவர் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியை துவக்கிய தா.பாண்டியன், ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கி 1983 முதல் 2000 வரை மாநில செயலராக இருந்தார். பின், 2000ல் கட்சியை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார். இதற்கிடையே 1989 முதல் 1996 வரை இரண்டு முறை லோக்சபா எம்.பி., ஆகவும் இருந்துள்ளார். மேலும், இ.கம்யூ., மாநில செயலராக 2005 முதல் 2015 வரை பதவி வகித்தார். கடந்த 2018 வரை இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாக்குழு உறுப்பினராக பதவி வகித்தார்.

தா.பாண்டியனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர்.