விளையாட்டு

இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்ஸ் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார் கோலி!

இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்ஸ் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் 75 மில்லியன் பேர் பின்தொடரும் முதல் ஆசிய வீரர் என்கிற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றார். தற்போது 100 மில்லியன் என்கிற இலக்கை எட்டியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடருபவர்களில் நான்காவது விளையாட்டு வீரர் கோலி ஆவார். இன்ஸ்டாகிராம் தவிர, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் கோலியை அதிக ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். தற்போது வரை அவருக்கு ட்விட்டரில் 4.08 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர். அதே நேரத்தில் ஃபேஸ்புக்கில் 3.6 கோடிக்கும் அதிகமான லைக்குகள் உள்ளன.

இதனையொட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை 6 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 26.6 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட விளையாட்டு வீரராக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார். பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி மற்றும் பிரேசிலின் நெய்மர் முறையே 18.6 கோடி, 14.7 கோடி பின்தொடர்பாளர்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.