கோவிட் -19 தடுப்பூசியின் முதல் தவணையை இன்று போட்டுக் கொண்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் தவணையை இன்று தனது பெற்றோருடன் அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்.
நாட்டில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை டெல்லி அரசு மருவத்துவமனையில் போட்டுக் கொண்டார்.
பூனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தாயரித்த கோவிஷீல்டு தடுப்பூசி அவருக்கு செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரின் பெற்றோர் கோபிந்த் ராம் கெஜ்ரிவால், கீதா தேவி ஆகியோருக்கும் தடுப்பூசியின் முதல் தவணை போட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின், நானும் என் பெற்றோரும் நலமுடன் இருக்கிறோம். இனி தடுப்பூசி குறித்த பயமோ, கவலையோ பொதுமக்கள் மத்தியில் தேவையில்லை. மேலும் தேவைப்பட்டால் தடுப்பூசி அளிக்கும் முகாம்களை அதிகரிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை செய்ய மத்திய அரசுடன் எப்போதும் இணைந்து பணியாற்ற டெல்லி அரசு தயாராக இருக்கும்” எனத் தெரிவித்தார்.