விளையாட்டு

IND VS ENG TEST : இந்திய அணியின் சூழலில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் .

இந்திய இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிரவ்லே மற்றும் சிப்லே ஆகியோரை ஒற்றை இலக்க ரன்களில், சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் வெளியேற்றினார்.
அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளை வரை, இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்க 75 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா சார்பில் அக்சர் படேல் 2 விக்கெட்களையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உணவு இடைவெளிக்கு பிறகு ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணியில், ஜானி பேர்ஸ்டோ 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் 51 ரன்னிலும், இதையடுத்து ஒல்லி போப் 29 ரன்னிலும், பென் போக்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின் நிலைத்து ஆடிவந்த லாரண்ஸும் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்குள் சுருண்டது.