விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் இந்திய வீராங்கனை மேரிகோமுக்கு முக்கிய பதவி

சர்வதேச குத்துச்சண்டை சங்க நிர்வாகத்தில் செய்யப்பட்ட மறுசீரமைப்பை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்கள் மற்றும் மூத்த வீரர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டியின் தலைவராக 6 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவரும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியவருமான 37 வயது இந்திய வீராங்கனை மேரிகோம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சர்வதேச குத்துச்சண்டை சங்க இயக்குனர்கள் இ-மெயில் மூலம் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மேரிகோமுக்கு இந்த கவுரவ பதவி கிடைத்து இருக்கிறது.

‘புதிய பணியை அளித்து இருப்பதற்காக சர்வதேச குத்துச்சண்டை சங்க தலைவர் கிரெம்லிவ் மற்றும் குத்துச்சண்டை குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் மேம்பாட்டுக்காக எனது சிறந்த பங்களிப்பை அளிப்பேன்’ என்று மேரிகோம் தெரிவித்துள்ளார்.