விளையாட்டு

6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்தார் பொலார்டு

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் மார்ச் 3-ஆம் தேதியும், அடுத்த ஆட்டம் 5-ஆம் தேதியும், கடைசி ஆட்டம் 7-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், முதல் டி20 நேற்று ஆன்டிகுவா மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. 132 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி ஆட்டக்காரர் கைரன் பொலார்டின் கலக்கல் ஆட்டத்தால் 13.1 ஓவரிலேயே 134 ரன்களை எடுத்து எளிதாக வென்றது.

52 ரன்களுக்கு விக்கெட்டே இல்லாமல் ஆடிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை வீரர் அகிலா தனஞ்செயா வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை விட்டு பரிதாப நிலைக்கு சென்றது. பின்னர் இறங்கிய சிம்மன்ஸும் உடனே அவுட் ஆகினார். அதன்பின் களமிறங்கிய அதிரடி மன்னன் பொலார்டு இலங்கை வீரர் அகிலா தனஞ்செயா வீசிய ஓவரில் பழிக்குப் பழியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி வெற்றிக்கு உதவினார். அந்த போட்டியில் அவர் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.