குற்றம்

காதலில் விழுந்த மகளின் தலையை வெட்டிக் கொன்ற கொடூர தந்தை ! உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் ஓர் கொடூர சம்பவம் !

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தை சேர்ந்த சர்வேஷ் குமாரின் 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த சர்வேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகளின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு மகளின் தலையை கையில் பிடித்தபடி சாலையில் நடந்து சென்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அரண்டுபோய் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இரண்டு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாலையில் நடந்து சென்ற சர்வேஷ் குமாரை மொபைலில் வீடியோ எடுத்தபடி போலீசார் விசாரித்தனர். பெயர் என்ன, எங்கிருந்து வருகிறார், யாருடைய தலையை கையில் வைத்திருக்கிறார் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். எல்லா கேள்விகளுக்கும் சற்றும் தடுமாற்றம் இல்லாமல் பதில் அளித்தார் சர்வேஷ் குமார். தனது மகளின் காதல் விவகாரம் பிடிக்காததால் அவரின் தலையை வெட்டியதாக சர்வேஷ் குமார் ஒப்புக்கொண்டது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அவர், “நான் தான் செய்தேன். யாருமே அப்போது அங்கு இல்லை. அறையில் உடல் கிடக்கிறது” என்று கூறுகிறார். பின்னர் சர்வேஷ் குமாரை பிடித்துச்சென்ற போலீசார், அவர்மீது கொலை வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெண்களுக்கெதிரான குற்றங்களில் இந்தியாவிலேயே உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்றப் பதிவாணையத்தின் தகவல்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.