விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தின் மோடி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மோடி அரங்கில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதில் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், டான் லாரன்ஸ் முறையே 55 மற்றும் 46 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை முடித்தது. இந்திய அணியில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். எதிர்முனையில் களமிறங்கிய ரோகித் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி கேப்டன் கோலி டக் அவுட் ஆனார். அவரை அடுத்து வந்து ரிஷப் பந்த் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி ஸ்கோரை உயர்த்தி வந்தார். அப்போது ரோகித் சர்மா 49 ரன்களில் LBW முறையில் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 118 பந்துகளுக்கு 101 ரன்கள் குவித்து வெளியேறினார். 2ம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் சேர்த்திருந்தது.

3ம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும் அக்ஸர் படேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்தநிலையில், அக்ஸர் பட்டேல் 43 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் சதமடித்து விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மறுபுறம் இறங்கிய வீரர்களை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், சதம் அடிக்க முடியாமல் 96 ரன்களில் ஏமாற்றத்துடன் வாஷிங்டன் சுந்தர் பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் இந்திய அணி 114.4 ஓவர்களில் 365 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதன்பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்களை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ரன் ஏதும் சேர்க்க விடாமல் அடுத்தடுத்து வெளியேற்றினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக லாரன்ஸ் 50 ரன்களும் கேப்டன் ரூட் 30 ரன்களும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணியில் அக்சர் பட்டேல், அஸ்வின் இருவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. மேலும், 3 – 1 என்ற என்ற புள்ளிக்கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.