இறுதி வரை பொறுப்புடன் விளையாடிய வாஷிங்டன் சுந்தர்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 365 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 160 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்ஸர் படேல் 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.
2-ம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. 3-ம் நாளான இன்று வாஷிங்டன் சுந்தரும் அக்ஸர் படேலும் சீராக விளையாடி ரன் சேர்த்தார்கள். சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் – அக்ஸர் கூட்டணி 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தியது. எனினும் தேவையில்லாமல் ஓடி 43 ரன்களில் ரன் அவுட் ஆனார் அக்ஸர் படேல். அப்போது 96 ரன்களில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவர் எப்படியும் சதமடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்த ஓவரில் இஷாந்த் சர்மா, சிராஜ் ஆகிய இருவரையும் டக் அவுட் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இதனால் மறுமுனையில் இருந்த வாஷிங்டன் சுந்தர், ஏமாற்றத்தோடு 96 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி, 114.4 ஓவர்களில் 365 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்துத் தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் லீச் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
3-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிவருகிறது. அஸ்வின், அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளனர்.