கொரோனா நிவாரண நிதியாக அமெரிக்க மக்களுக்கு தலா 1400 டாலர் வழங்கும் பணி துவக்கம் – ஜோ பைடன் அறிவிப்பு
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது .
அமெரிக்காவில் வைரஸ் தொற்று பாதிப்பும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்றார்.
இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டுவந்தார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இதற்கான கொரோனா நிவாரண மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த நிவாரண மசோதா குறித்து ஜோ பைடன் கூறுகையில், ‛இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறுவார்கள். திட்டத்தின் மூலம் விரைவில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்.
இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) வழங்கும் பணி துவங்கப்படும் என தெரிவித்தார் .
கடந்த டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட ஊக்குவிப்பு மசோதா மூலம் ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே 600 டாலர் (சுமார் ரூ.42 ஆயிரம்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.