உலகம்

‘இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் எதிராளிகள் அல்ல’ – சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் நடந்த வன்முறை மோதல், எல்லையில் இரு நாட்டு படைகள் குவிப்பு என்று இந்திய-சீன உறவு கரடுமுரடான பாதையில் பயணித்தது. ஆனால் பதற்றத்தை தணிக்க , பல வழிகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து இரு தரப்பும் படை விலக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டன.

சமீபத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் தொலைபேசியில் 75 நிமிட பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி, சீன துணை வெளியுறவு மந்திரி லூ ஸாஹுய்யை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், சீன நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்திர நிகழ்வை ஒட்டி நேற்று நடந்த காணொலி காட்சி வாயிலான பத்திரிகையாளர்சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியதாவது:-

பல முக்கியமான விஷயங்களில் இரு நாடுகளின் நிலைகளும் ஒரே மாதிரியானவை, அல்லது அதற்கு நெருக்கமானவை. எனவே சீனாவும், இந்தியாவும் நண்பர்கள், தவிர, எதிராளிகளோ, அச்சுறுத்தல்களோ அல்ல. இரு தரப்பும் அடுத்தவர் வெற்றி பெற உதவ வேண்டுமே தவிர, குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் சந்தேகத்தை வளர்ப்பதற்கு பதிலாக, ஒத்துழைப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை, உரையாடல் மூலம் தீர்வு காண்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அதேவேளையில், எங்களின் இறையாண்மை உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியாக உள்ளோம்.’
என கூறினார்.