அரசியல்தமிழ்நாடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிப் பங்கீடு ஒதுக்குவது தொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு குறித்து திமுக – மார்க்சிஸ்ட் கட்சிக்கு இடையே இழுபறி நீடித்துவந்த நிலையில் இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

இதுகுறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தேர்தல்கள் அதிகமாக இடங்களில் எங்கள் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளோம். இந்நிலையில் தற்போது திமுக ஒதுக்கியுள்ள ஆறு தொகுதிகள் என்ற எண்ணிக்கை என்பது குறைவுதான். தற்போது திமுக ஒதுக்கியுள்ள ஆறு தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் மகிழ்ச்சியோ வருத்தமோ கிடையாது.

கூடுதலான இடங்களை திமுக ஒதுக்குவார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் அதேசமயம் இன்றைக்கு அதிமுக – பாஜக கூட்டணியை முறியடிக்கவேண்டும் என்ற அரசியல் அவசியம் உள்ளது. அதற்கு எந்த சிறு பிரச்சினையும் இந்த கூட்டணியில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை ஏற்றுக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற எங்கள் கட்சி சார்பில் பணியாற்றுவோம்” என்றார்.