இந்தியா

3 நாள் சுற்றுப்பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை

3 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக்கொண்டு காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

10-ந்தேதி(புதன்கிழமை) காலை கவா்னா் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் புறப்பட்டு செல்கிறாா். வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதன்பின்பு தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொள்கிறாா். மாலையில் வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, காரில் கவா்னா் மாளிகை சென்று தங்குகிறார்.

11-ந் தேதி(வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிற்பகலில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடியரசு தலைவர் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

குடியரசு தலைவர் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா். அவர்கள், சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா் வந்து இறங்கும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா்.

அதைதொடர்ந்து சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் 3 நாள் பயணத்தின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் குடியரசு தலைவரின் பாதுகாப்புபடை உயா் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வருகிற 11-ந்தேதி மாலை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.