இந்தியா

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி டாக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 15 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தினம் வரும் மார்ச் 26-ம் தேதி தலைநகர் டாக்காவில் விமர்சையாக கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான நிகழ்வாக வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிப் உர் ரஹ்மானின் நினைவு தினமான ‘முஜிப் திவஸ்’ கொண்டாடப்படவுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வங்கதேசம் செல்வுள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடி கடைசியாகக் கடந்த 2019- நவம்பர் மாதம் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொரோனா நோய்த் தொற்று காரணமாகக் கடந்த 15 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் மோடி செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

கடந்த ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் வங்கதேச ராணுவக் குழு அணிவகுத்துச்சென்றது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் புதிய தொடக்கமாக அமைந்தது.

பிரதமர் மோடியின் வங்கதேச பயணத்தின்போது இந்தியா – வங்கதேசம் இடையிலான டாக்கா – மேற்கு வங்கம் நியூஜல்பைகுரி இடையிலான பயணிகள் ரயில் சேவையைத் தொடக்கிவைக்க உள்ளார்.

பாகிஸ்தானின் ஒரு பகுதியான கிழக்கு பாகிஸ்தானிலிருந்து 1971-ம் ஆண்டு வங்கதேசம் பிரிந்து தனிநாடாக உருவானது. வங்கதேசம் உருவானதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.