தாக்கப்பட்டாரா மம்தா பானர்ஜி ?
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற உள்ள மேற்குவங்கத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, பின்னர் அங்குள்ள கோவிலில் வழிபாடு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து காரில் ஏறுவதற்காக சென்ற மம்தா பானர்ஜியை அடையாளம் தெரியாத நபர்கள் தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் நடக்கும் போது காவல்துறையினர் தனக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் சம்பவத்தால் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநிலத் தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை 5 மணிக்குள் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.