இந்தியா

ஆமதாபாத் – தண்டி பாதயாத்திரை : கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாட்டின் 75-வது சுதந்திர தினம், ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி இதனை துவக்கி வைக்கிறார்.

இதுதவிர, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி நோக்கி 21 நாட்கள் நடை பயண இயக்கத்தையும், மோடி துவக்கி வைக்கிறார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதேபோன்று பொதுமக்களுக்கும் அழைப்பு விடப்பட்டது.

இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆமதாபாத் நகரின் அபய் காட் பகுதிக்கு பாதயாத்திரையாக மக்கள் இன்று திரண்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி ஆமதாபாத் நகரில் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் ஆசிரமத்தில் ஹிருதய் குஞ்ச் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி புகைப்படத்திற்கும் மலர்மாலை சூட்டினார்.

இதன்பின்பு, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரிலான வலைதளம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து தண்டி நோக்கிய பாதயாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதில் திரளான மக்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி நடைபயணம் மேற்கொண்டனர்.