அரசியல்தமிழ்நாடு

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் அதிமுக வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவுக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அரசின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், இதுகுறித்து பொதுமேடையில் நேருக்குநேர் விவாதிக்க ஸ்டாலின் தயங்குவதாகவும் விமர்சனம் செய்தார். தேர்தலின்போது அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளதாக கூறிய முதலமைச்சர், ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சமூக நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து முதல்வர் ஆகிவிட்டதை போன்று ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளைர் நல்லதம்பியை ஆதரித்து தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகிலும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெய்சங்கரனை ஆதரித்து ராணிப்பேட்டை பிள்ளையார் திடலில் திறந்த வேனில் நின்றபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது குறித்து விமர்சனம் செய்தார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.