விளையாட்டு

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனாவை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் பும்ரா .

கிரிக்கெட் வீரர் பும்ரா தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும் கோவாவில் இன்று திருமணம் நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சனா பகிர்ந்துள்ளார்.அத்துடன், “காதல் உங்களை சரி என்று தேர்ந்தெடுத்தால் அதுவே உங்களை வழிநடத்தும். இன்று நாங்கள் புதிய தொடக்கத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் பும்ரா இதுவரையில் 19 டெஸ்ட், 67 ஒருநாள் போட்டி, 50 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியான நிலையில், திடீரென திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார் பும்ரா.

பும்ராவை திருமணம் செய்துகொண்டுள்ள சஞ்சனாவின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை சேர்ந்தவர், தாய் சுஷ்மா மகராஷ்டிராவைச் சேர்ந்த வழக்கறிஞர். தந்தை தமிழராக இருந்தாலும் இவர் மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் பிறந்து வளர்ந்துள்ளார்.

பி.டெக் பட்டப்படிப்பை முடித்த சஞ்சனா பிரபல மாடலாகவும் இருக்கிறார். 2019ம் ஆண்டின் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கினார். மேலும் இவர் டிவி நிகழ்ச்சியான எம்டிவி ஸ்பிலிட்ஸ் வில்லா சீசன் 7-ல் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.