பாஜக விவசாயிகளுக்கான அரசு – மாநில தலைவர் எல்.முருகன்
விவசாயிகளின் நலன் காக்க நடப்பு நிதிநிலை அறிக்கையில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியது பாஜக தலைமையிலான மத்திய அரசு என அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன், ஒலி-ஒளி பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசு உள்ளதாகவும், அதன் காரணமாகவே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நடப்பு நிதி ஆண்டில், விவசாயிகளின் நலன் காக்க, 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதற்காக மட்டுமே 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் பாதை திட்டம் தனது தேர்தல் அறிக்கையில் ஒன்றாக இருக்கும் என கூறிய எல். முருகன், தான் வெற்றி பெற்றபின் ரயில் பாதையை அமைத்து தர மத்திய அரசிடம் பேசி தீர்வு காணப் போவதாகவும் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டைக்குள் நுழைந்த, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சதிச்செயலை நிகழ்த்தினர் என குற்றம்சாட்டினார். மேலும், தமிழக விவசாயிகள் மீது அக்கறை இருப்பதால்தான், வேளாண் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள 7 செயல்திட்டங்களை ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது என்றும், அதனை அப்படியே காப்பி அடித்துள்ள ஸ்டாலின், சொந்தமாக ஒரு திட்டத்தை கூட அறிவிக்கவில்லை எனவும் சாடினார்.