அரசியல்தமிழ்நாடு

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம் – முதல்வர் பழனிசாமி வாக்குறுதி!

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர், சோலார் அடுப்பு, வாஷிங் மெஷின் ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் பெரும் போட்டி நிலவி வருகிறது. அதிமுக வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது; அனைத்து துறையிலும் அதிமுக அரசு விருதுகள் பெற்று உள்ளது. இதை பற்றி ஒரே மேடையில் பேச எதிர்க்கட்சித் தலைவர் தயாரா என கேள்வி எழுப்பினார். அதிமுக அமைச்சர்கள் மீது ஒரு ஊழல்வழக்கு தொடர முடியாது.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டிய முதல்வர் வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள், சோலார் அடுப்பு, வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். இதனால் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.