அரசியல்தமிழ்நாடு

தமிழ்நாடு முன்னேற டபுள் இஞ்சினின் கூட்டணி தேவை – சி.டி.ரவி!

தமிழ் நாடு முன்னேறுவதற்கு பிரதமர் மோடி – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிற டபுள் இஞ்சின் தேவை என பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதி இன்று வெளியிடப்பட்டது. இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி ரவி கலந்து கொண்டனர். அப்போது நிருபர்களிடம் பேசிய சிடி ரவி; திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தவறான செய்திகளை தெரிவித்து வருகிறார்.

இந்துக் கடவுளை மட்டும் இழிவு படுத்தி வரும் ஸ்டாலின் திடீரென வேல் விவகாரத்தில் நாடகமாடி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயாரைப் பற்றி திமுக பொதுச்செயலாளராக ஆர். ராசா பேசியது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

மேலும், கோவை மண்ணின் மகளான வானதி சீனிவாசனை மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழ்நாடு முன்னேறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய டபுள் இஞ்ஜின் வேண்டும் என தெரிவித்துள்ளார்.