பெண்மையை அவதூறு கூறும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது – யோகி ஆதித்யநாத் காட்டம்!
பெண்மையை அவதூறு கூறும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரக்கூடாது என உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இன்று பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இவருடைய பிரச்சாரத்தை கோவை புளியங்குளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார். சாமி தரிசனம் முடிந்தவுடன் பிரச்சார வாகனத்தில் ஏறி வானதி சீனிவாசனை ஆதரவாக மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.இவரைத் தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேலான அதிமுக, பாஜக கூட்டணி தொண்டர்கள் வாகனப் பேரணியை துவங்கினர். புளியங்குளத்தில் இருந்து துவங்கி ராமநாதபுரம், சுங்கம், உக்கடம் வழியே சென்று இறுதியில் தேர்நிலை திடலில் வாகனப் பேரணி முடிவடைந்தது.
அதில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மற்றும் கோவை மண்ணின் மகளான வானதி சீனிவாசனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டு கொண்டார்.உத்திரப்பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக தமிழ்நாட்டில் இருந்து 120 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் மண்ணுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர்; கோவை மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெண்மையை பற்றி அவதூறான கருத்துக்களையும் தரக்குறைவான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் பெண்மையை அவமதிக்கும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது. ஆகவே அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என யோகி ஆதித்யநாத் கேட்டுகொண்டார்.