நந்திகிராம் தொகுதியில் மம்தா படுதோல்வி அடைவர் – அமித்ஷா பேச்சு!
மேற்கு வங்காளத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி படு தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூச்பெஹர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்; மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியின் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவிவருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனை திரிணாமுல் காங்கிரஸ் அரசு தடுத்து நிறுத்தவில்லை. இதனை தடுப்பதற்கு பாஜகவால் மட்டும் தான் முடியும் என தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி பணம் பறித்தல், சர்வாதிகாரம் போன்றவற்றை கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி அடையும். தற்போது நடந்து முடிந்த இரண்டாம் கட்ட தேர்தலிலும் பாஜக வெற்றி அடையும். மேலும், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைவார் என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.