தேர்தல் களத்தில் அயராமல் பொறுப்புடன் பணியாற்றிய தோழர்களுக்கு நன்றி – மு.க,ஸ்டாலின்!
நேற்று தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அயராமல் பொறுப்புடன் பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சி தோழர்களுக்கு நன்றி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை குறித்து ஸ்டாலினின் அறிக்கையில்; தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் தன்மை உணர்ந்து மிகுந்த பொறுப்புடனும், ஒருங்கிணைப்புடனும் அயராமல் களப்பணியாற்றிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் திருவிழாவில் பேரார்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்களுக்கும், இப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறையினர் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதால் இரட்டிப்புப் பொறுப்புடன் தி.மு.க.வினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2-ஆம் தேதி வரை இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுக்காக வேண்டும் எனவும் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தினம் வரை நமக்கான பொறுப்பும், கடமையும் அதிகமாக உள்ளது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.