எதிர்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிமுகவில் ஆறு பேர் நீக்கம் – தலைமை அதிரடி!
எதிர்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிமுகவில் ஆறு பேரை அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து நீக்கியுள்ளனர்.
இது குறித்து அவர்களின் அறிக்கையில்; கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கழங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த
திருமதி சத்யா பன்னீர் செல்வம், MLA., (கழக மகளிர் அணி துணைச் செயலாளர்)
திரு. P. பன்னீர்செல்வம், (பண்ருட்டி நகர மன்ற முன்னாள் தலைவர் )
திரு. M. பெருமாள் (பண்ருட்டி வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் )
திரு. மார்ட்டின் லூயிஸ் (எ) பாபு, ( அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் )
திரு. D. சௌந்தர், (நெல்லிக்குப்பம் நகரக் கழகச் செயலாளர்)
திரு. R. ராம்குமார், (தலைவர் – தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கி, வீரப்பெருமாநல்லூர்)
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.