தமிழ்நாடு

மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்திக்கொள்ளுங்கள் – முதல்வர் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி மருந்து உள்ளதால் மக்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி மருந்தைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி உள்ளார்.

இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது; 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட உடன் தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொரோனா பரவலை படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவந்தோம். மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் ஆகியோரை ஆலோசனை செய்து பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

இந்தியா முழுவதும் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 400 என்ற எண்ணிக்கையில் இருந்த கொரோனா பரவல் தற்போது ஏப்ரல் மாதம் 6 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மருத்துவமனையிலும் சிறப்பு மையங்களிலும் 80 ஆயிரத்துக்கும் மேலான படுக்கைகள், 32 ஆயிரத்துக்கும் மேலான ஆக்சிஜன் வசதிகள், 6,517 பேருக்கு வென்டிலேட்டர் வசதிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. தற்போது உயிரிழப்பு சதவீதம் 1.38 ஆகவும், குணமடைபவர்களின் விகிதம் 94.12 சதவீதமாகவும் உள்ளது.

இதனால், மக்கள் அனைவரும் தங்களின் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.