கொரோனாவை எதிர்கொள்ளும் போராட்டத்திற்கு ராணுவம் ரெடி – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
கொரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக அனைத்து மாநிலங்களுக்கும் உதவுவதற்கு ராணுவம் தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அனைத்து தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக ராணுவ உயர் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாடினார். அப்போது அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை செய்வதற்கு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் அனைத்து மாநிலங்களுக்கும் உதவிகளை செய்ய முப்படைகளும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ மருத்துவமனையில் கொரோனா சிகிக்சை அளிக்க தேவையான வசதிகள் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில அரசுகளுக்கு தேவையான ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யும் படி ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட ராணுவ பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.