ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள உடனடியாக 104 அழையுங்கள் – தமிழக அரசு!
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள உடனடி தேவைக்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதை பற்றி அறிக்கையில்; கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கொரோனா சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவ மனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.