தமிழ் மருத்துவ துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் – காயத்ரி ரகுராம் கோரிக்கை!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதில் மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் முதல் கட்ட பரலின் போது சித்த மருத்துவத்தை கொண்டு கொரோனாவை அழிப்பதற்கு கோரிக்கைகள் பெருமளவில் எழுந்தது. ஆனால், அதனை அரசு பெருமளவில் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவ துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்
இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; தமிழ் மருத்துவத்தின் பயன்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல தமிழ் மருத்துவத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு ஆட்சிக்கு வருபவர் யாராக இருந்தாலும், வருமுன் காப்போம் என்ற பொன்மொழிக்கேற்ப கொடும் நோய் தொற்றை தடுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளை மக்களிடம் முன்னெடுத்து செல்வது அவசியமானது.
தமிழ்நாட்டில் இருந்து முன்னெடுக்காவிட்டால் யார் முன்னெடுப்பது? கடுந்தொற்று காலத்திலும் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லி மக்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது அல்லாமல், தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளின் மகத்துவத்தையும், பெருமையையும் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும். சித்தர்களின் தமிழ் மருத்துவக்களஞ்சியங்களை ஓலைச்சுவடிகள் வழியாக வழங்கி அருந்தொண்டாற்றும் தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கோரிக்கை வைத்துள்ளார்.