திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது – மு.க.ஸ்டாலின் உறுதி!
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக நான்கு மாதத்துக்கு திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் திமுக தரப்பில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் அனுமதி வழங்க வலியுறுத்தப்பட்டது.
இதனால் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக நான்கு மாதத்துக்கு திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதன் தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் பேஸ்புக் பதிவில்; ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தி.மு.கவின் சார்பில் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களும், கழகத்தின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி. கனிமொழி அவர்களும் பங்கேற்று, கழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.
மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இம்முடிவு தற்காலிகமானதுதான். தி.மு.க. ஆட்சி அமைந்த பின் நச்சு ஆலையான ஸ்டெர்லைட் எப்போதும் எந்தச் சூழலிலும் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.