தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முடிவு எடுத்திருப்பது நியாயம்தானா? – சரத்குமார் கேள்வி!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் கடும் நடவடிக்கைளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், பல மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு அதிமாக ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு முடிவு எடுத்திருப்பது நியாயம்தானா? என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை பற்றி அவரின் அறிக்கையில்; ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்து, ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக தமிழக அரசு இன்று கூட்டிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கிறோம், அதுமட்டுமல்லாமல் அதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, 4 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து இலவசமாக தருகிறோம் என இத்தருணத்தில் உதவி செய்ய முன்வருவதால், மக்களின் உயிர்காக்க மனிதநேய அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிப்பது வரவேற்கத்தக்க ஒன்று தான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

இருப்பினும், தமிழகம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததுடன் தனது அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு 65 டன் வழங்கியது. தற்போது, தமிழகத்தை காட்டிலும் வட இந்தியாவில் தான் கொரோனா தொற்று நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு, ஆக்சிஜன் தேவையும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையும் அதிகமாகி இருக்கிறது. நாளுக்கு நாள் வட இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள், மக்களின் பரிதாபகரமான நிலை கண்டு உலகமே கண்ணீர் சிந்துகிறது.

தமிழகத்தில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்தாலும் வட இந்தியாவுக்கு எப்போது, எப்படி கொண்டு சென்று நோயாளியிடம் உரிய நேரத்தில் சேர்க்க முடியும்? அப்படி கொண்டு சென்றாலும் மீண்டும் மீண்டும் ஏற்படும் ஆக்சிஜன் தேவைக்கு உடனடியாக ஆக்சிஜனை இங்கிருந்து வழங்குவது சாத்தியமா?

பெரும்பாலான வட இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் இல்லை என்பது கசப்பான உண்மை. இந்த அவசரகாலத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வட இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்கு ஆகும் செலவையும், நேரத்தையும் பயன்படுத்தி, வட இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்கும் சிறுசிறுயூனிட்டுகளையும், சேமிப்புகலன்களையும் அமைத்தால், அங்கே நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கிடும் தற்காலிக தீர்வாக மட்டும் அமையாமல், வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் நிரந்தரத்தீர்வாகவும் அமையும்.

அதேசமயம், வட இந்தியாவில் மருத்துவ கட்டமைப்புகளும் முன்னேற்றம் காணும். தற்போது, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் ஆக்சிஜனை பிரித்து துரிதமாக ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளலாம்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிப்பதற்கு பதிலாக, வேதாந்தா நிறுவனம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ், கூகுள் நிறுவனம், பிற பெருநிறுவனங்கள் போன்று நிதி உதவி செய்தோ, நாட்டின் பிற பகுதிகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு துணைநின்றோ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த உதவி செய்திருந்தால் அவர்களின் மனிதநேயம் புரிந்திருக்கும்.

ஆனால், தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துதான் ஆக்சிஜன் தயாரிக்கவேண்டும் என்ற சூழல் இல்லாத காரணத்தால், அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.