அமைச்சரும், மத்திய அரசும் மாறிமாறி கை காட்டி மக்களை ஏமாற்றுகிறது – உதயநிதி காட்டம்!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பல மாநிலத்தில் மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்துக்கு மத்திய அரசு அனுப்புகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு மத்திய அரசு தமிழக அரசின் ஆலோசனைக்கு பின்பு தான் ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது என விளக்கம் அளித்தது.
இந்நிலையில், மாநில அரசை ஆலோசிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், ‘கலந்தாலோசித்து தான் அனுப்பினோம்’ என மத்திய அரசும் மாறிமாறி கூறுவது தமிழக மக்களை ஏமாற்றுவது உறுதியாகிறது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதை பற்றி அவரின் பதிவில்; தமிழகத்தில் உற்பத்தியான ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்ப மாநில அரசை ஒன்றிய அரசு ஆலோசிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், ‘கலந்தாலோசித்து தான் அனுப்பினோம்’ என மத்திய அரசும் மாறிமாறி கை காட்டுவதன் மூலம் இருதரப்பும் தமிழக மக்களை ஏமாற்றுவது உறுதியாகிறது.
மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பின்றி ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு ஆக்சிஜன் அனுப்ப வாய்ப்பில்லை. நம் உரிமைகளை தாரைவார்த்தே பழகிய அடிமை அரசு, ஆக்சிஜன் விஷயத்திலும் முதலாளிகள் எடுத்துக்கொள்ளட்டும் என இருந்துவிட்டு, இப்போது நாடகமாடுகிறது. இதை மக்கள் உணராமல் இல்லை என உதயநிதி பதிவிட்டுள்ளார்.