பொதுத் தொகுதியில் வெற்றி பெற்று நாங்கள் சாதி கட்சி இல்லை என்பதை நிரூபித்துள்ளோம்
சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் சிந்தனைச்செல்வன், நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷாநவாஸ், திருப்போரூர் தொகுதியில் எஸ். எஸ். பாலாஜி, செய்யூர் தொகுதி யில் பனையூர் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
விசிக சார்பில் வெற்றிபெற்ற 4 சட்டமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் சதிவேலைகள் மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை என்றார். குறிப்பாக மேற்கு வங்கத்தில் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்ட பாரதிய ஜனதா படுதோல்வி அடைந்திருக்கிறது என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 நாள் இடைவெளியில் ஒரு சின்னத்தை முன்னெடுத்து 4 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துக்குள் ஒடுக்கிவிட நினைத்த மதவாத சாதியவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக தனித் தொகுதிகளில் மட்டுமல்ல 2 பொதுத் தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கட்சி என்ற நற்பெயரை விடுதலை சிறுத்தைகள் கட்சி வாங்கியிருக்கிறது என்று திருமாவளவன் பேசினார்.