வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு, அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை… மக்கள் புகார்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் நடைபெற்று வரும் மணல் திருட்டை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே கடலில் கலக்கிறது.
வைகையாற்றை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை நம்பி விவசாயம் செயல்படுகிறது . மேலும் அந்த மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில் பரமக்குடி அருகே மந்தி வலசை, பொட்டிதட்டி கிராமங்களில் இரவு நேரங்களில் வைகை ஆற்றில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. இது குறித்து கிராம மக்கள், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என கிராமமக்கள் புகார் அளிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம தலைவர் சிவ செல்வராஜ் கூறுகையில் வைகை ஆற்றில் மணல் திருட்டை தடுப்பதற்காக ஆற்றின் கரையில் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளத்தை மூடிவிட்டு லாரிகளில் தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர். அதிகாரிகளுக்கு தகவல் கூறினால் சம்பவத்திற்கு வர மறுக்கின்றனர். மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதால் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மணல் திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பொட்டிதவைடி ஊராட்சிக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த குடும்பங்களின் ரேஷன்கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளோம் என அவர் கூறினார்.